தாய் மொழி பேசி , சொந்த நாட்டில் உழைத்து பெற்றோரை பார்ப்பது என்பது வரம்


  • Share on Google+

நண்பா ,

சுமார் ஐந்து  வருடங்களுக்கு முன்பு , வீட்டு உறுதியை அடகு வைத்து, மேல் படிப்புக்கு கடன் வாங்கி; உன்னை அமெரிக்கா அனுப்பி படிக்க வைத்ததும் இதே பெற்றோர்களே ! இருந்தும் , படிப்பு முடிந்ததும் நீ திரும்பி வருவாய் என்று நினைக்கும் போது நீ காதலித்த பெண்ணையே திருமணம் செய்யப்போகிறேன் என்றாய் .

இப்போதெல்லாம் யாரோ  காதலித்த பெண்ணை யாரையோ காதலித்தவர்கள் திருமணம் செய்யும் காலம்! எனினும் , உன் அப்பா அம்மாவையும் சம்மதிக்க வைத்தேன் . அதன் பின்பு , திருமணத்திற்க்கு பெற்றோரை இந்தியாவிற்கு அழைத்தால் செலவு அதிகம் ஏற்படும் என அழைப்பிதழையும் , புகை படங்களையும் Facebook ஊடக அனுப்பி வைத்ததும் நீ சொல்லி நான் அறிவேன் .

நேற்றிரவு பேசியபடி இன்று உன் வீட்டிற்கு சென்றேன் , உன் அம்மா மட்டும் தான் வீட்டில் இருந்தார் . இதோ எமது சம்பாஷனை ….


நண்பனின் அம்மா :தம்பி இப்ப என்ன பண்ணுறீங்க ?

பதில்:  நான் இப்ப ஒரு IT கம்பனியில் டிரைவர் ஆக இருக்கிறேன் .

நண்பனின் அம்மா : சும்மா சொல்லாதையும் , எண்ட மகன் சொன்னான் நீ எதோ ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி நடாத்திரியாம் , நிறைய பேர் வேலை செய்யிறாங்கள் எண்டு, வாகனம் எல்லாம் நிறைய நிக்குதாம் .

பதில்: உண்மை தான் அம்மா .

நண்பனின் அம்மா :அப்போ ஏன் டிரைவர் எண்டு பொய் சொன்னீர ? எண்ட மகனை பார்த்தீரே போன வருஷம் தான் புது வீடு வாங்கி தந்தான் . தம்பிக்கும் பைக் வாங்கி குடுத்து இருக்கிறான். ஏப்ரல் குடும்பத்தோட இஞ்ச வாரான் .

பதில்:  நேற்று நைட் என்னுடன் வைபர் இல் கதைச்சவன் ! யாழ்ப்பாணம் போகேக்க , சும்மா வீட்டை போய் ஒரு எட்டு பார்க்க சொன்னான். அது தான் அப்படியே பார்த்துட்டு போகலாம் எண்டு வந்தன் .

நண்பனின் அம்மா :அவன் சரியான பிஸி . எங்களுக்கே மாசத்தில ரெண்டு மூண்டு தரம் தான் கோல் பண்ணுவான், ஆனால் மருமகளும் பேத்தியும் தங்கச்சியோட ஸ்கைப் கதைப்பிணம் . விஸா கிடக்கிறதுக்கு முதல் இந்தியாவில தானே கல்யாணம் நடந்தது! இப்போ தான் முதன் முறையாக மருமகளையும், பேர்த்திய பாக்கப்போறம் .

பதில்: 🙂

நண்பனின் அம்மா : அது சரி, இது உண்ட சொந்த கம்பெனி எண்டு சொன்னான் .. எவ்வளவு பேர் வேலை செய்யினம் ? அப்பா அம்மா எல்லாம் இப்போ எங்கே ?

பதில்: ஓம் அம்மா , இப்போதைக்கு ஒரு 40 பேர்க்கு சம்பளம் குடுக்குற அளவுக்கு வளர்ந்துருக்கு , அப்பா அம்மா தங்கச்சி எல்லாரும் ஒன்டாக தான் இருக்கிறம் .

நண்பனின் அம்மா : நீ ஏன் வெளி நாட்டுக்கு போகலை ? இங்க இருந்து என்னத்த கண்டம்! இப்ப வசதி எண்ட போய் செட்டில் ஆகலாம் தானே ? கொஞ்சம் கொஞ்சமா எல்லாரையும் வெளில எடுக்கலாம்.

பதில்: ஏன்  ! இங்க நாற்பது பேருக்கு கிட்ட வேலைசெய்யினம் . அதை விட அப்பா ,அம்மா, பொஞ்சாதி மகனுடன் நான் சந்தோசமாக தான் இருக்கிறேன் . ஏன் இப்படி சொல்லுறியள் ?

நண்பனின் அம்மா : அதுக்கு இல்ல , வெளில போய்ட்டா எல்லாருக்கும் சுகம் தானே ! அங்க இருந்து கொண்டே  நல்ல வேலை எடுத்தீர் என்டா கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து ஒரு வீட்டை கட்டி முடிக்கலாம் .. இப்போ இருக்கிறது சொந்த வீடா ?

பதில்: இல்ல வாடகை வீடு! அது சரி தான் , நான் பார்க்கிறேன் . அங்கிள் வந்தா நான் வந்து போனதாக சொல்லுங்கோ . உங்கள்ட மகனுடன் நைட் கதைப்பேன் அவனிண்ட நீங்கள் சுகமாக இருக்கிறீங்கள் எண்டு சொல்லுறன் . இந்த பழ பாக்கை இதில வைக்கிறன் அம்மா .

நண்பனின் அம்மா : சரி தம்பி வீட்ட எல்லோரையும் கேட்டதா சொல்லு .

பதில்: 🙂


நண்பா ,

நீ வீடு வாங்கியது உன் மனைவி பேரில் , பின்னுரித்தாக தான் உன் அப்பாவை போட்டுள்ளாய் என்பதை தனது கவலையை மறைப்பதிக்காக உன்னை உயர்த்தி பேசும் அம்மாவிற்கு நான் சொல்லவில்லை .

நன்றாக படித்துள்ளாய் , உன்னுடன் ஆங்கிலம் பேசும் போது நான் திணறுகிறேன் , சில நேரங்களில் உனது ஆங்கில மொழி உச்சரிப்பை எண்ணி வியற்கிறேன் , ஆனால் அதை விட மேலாக நம் தாய் மொழி தமிழில் நீ பேசும் போது மட்டும் என்னிடம் தோற்பதை எண்ணி உண்மையில் வருந்துகின்றேன்  .

இவ்வளவு திறமை உள்ள உன்னால் எங்கு இருந்தாலும் உழைக்கமுடியும். அதை ஏன் இங்கே வந்து செய்ய மறுக்கிறாய் ?

இங்கே வந்து என்னத்தை செய்வது என்று கேற்பதை விடுத்து என்னத்தை செய்யலாம் என்று சிந்தி ! நீ வசிக்கும் அமெரிக்காவில் இருந்து கூட அமெரிக்க பிரஜைகள் எமது நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் , சில நிறுவனங்கள் முதலிட கூட தயாராக உள்ளன . அன்றொரு நாள் நீ கூறினாய் , உன் மனைவி அமெரிக்காவில் பிறந்த தமிழ் பெண் என்றும் தமிழ் நன்றாக பேச முடியாது என்பதை “பெருமிதமாக “. அமெரிக்க பிரஜைகளே தமிழை விரும்பி கற்றுக்கொள்ளும் இக்காலத்தில் , உன் மனைவி தமிழ் கற்றுக்கொள்ள நேரம் இல்லை என்பது வியப்பாக உள்ளது.
நண்பா ,
என்னை நினைத்து கவலை கொள்ளாதே! தாய் மொழி பேசி , சொந்த நாட்டில் உழைத்து , நாற்பது பேருக்கு ஊதியம் கொடுத்து , பெற்றோருடன் கடைசி வரைக்கும் அவர்களை பக்கத்தில் வைத்து பார்ப்பது என்பது வரம்! அந்த வரத்தை உனக்கு கடவுள் தரவில்லையா ? அல்லது நீயாகவே இப்படி ஒரு வாழ்க்கையை அமைத்து கொண்டாயா?

எதுவாயினும் , உன் வரவை எதிர் பார்த்து இருக்கும் உன் பெற்றோருடன் நானும் காத்திருக்கிறேன் ! ஏன் எனில் , நீ பேசுவதை உன் தாயிற்கு நான் மொழி பெயர்க்க வேண்டிய நிலை  கூட எனக்கு ஏற்படலாம் .

  • visagan
    Reply
    Author
    visagan

    காலத்திற்கேற்ற யதார்த்தமான பதிவு. அருமை. வாழ்த்துக்கள்

Leave a Reply